×

மணப்பாறை அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் பலி

* 11 ஆடுகள் படுகாயம்

மணப்பாறை : மணப்பாறை அருகே மர்ம விலங்கு கடிதத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த  4 ஆடுகள் பலியாயின. படுகாயமடைந்த 11 ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே கணவாய்ப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவர் 50க்கும் மேற்பட்ட செம்பறி ஆடுகளை வளர்த்து வருகிறார். மேய்ச்சல் நேரம் போக இரவு நேரங்களில் வீட்டிற்கு அருகாமையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது தோட்டத்தில் ஆட்டு பட்டிகள் அமைத்து அதில் அவைகளை அடைத்து வந்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை தனது ஆட்டு பட்டிக்கு சென்று பார்த்தபோது பட்டியில் இருந்த 4 ஆடுகள் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மேலும் 11 ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைக் கண்ட பெருமாள் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்து பார்த்த சிலர் மர்மமான முறையில் கடித்து இறந்த ஆடுகள் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் ஆடுகளை கடித்த மர்ம விலங்கு குறித்து விசாரணை நடத்தினர். பின்பு காயங்களுடன் உயிருக்கு போராடும் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடைத்துறை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க வைத்தனர். இதற்கு முன்பு அப்பகுதியில் உள்ள குருமலைகளம், புத்தாநத்தம், வெள்ளையகவுண்டம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆடுகளை குறி வைத்து மர்ம விலங்கு கடித்து குதறியதில் 15க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின.

எனவே, ஆடுகளை குறிவைத்து வேட்டையாடும் மர்ம விலங்கு குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணையும்,தேடுதல் வேட்டையும் நடத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : mantle , Manaparai ,Goats , un identified animal
× RELATED மணப்பாறை அருகே குழாய் உடைப்பில்...